அதிகாலை கடைதிறந்து வைத்திருக்கும் நேரமாயிற்று, சில மணி நேரத்திற்குப்பிறகு வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவர், அதற்குமுன் காலை செய்யப்படவேண்டிய உணவுவகைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவேண்டும். கடை திறந்தவுடன் முதன்முதலில் சமையல் செய்பவர்கள், சமையல் உதவியாளர்கள் வந்து விடுவார்கள். அடுத்து மற்ற வேலைசெய்யும் வேலையாட்களும் வந்து விடுவர். அப்பகுதியில் உள்ள பல உணவகங்களில் இதுவும் ஒன்று. அப்படியொன்றும் விசேஷமான உணவகம் கிடையாது, ஆயினும் லாபகரமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பெயரளவில் மட்டுமே அது செட்டிநாட்டு உணவகம். இன்று இன்னும் கடை திறக்கப்படவில்லை. "இந்த கெழவன் இன்னவும் கடைய திறக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?" என்று புலம்பிக் கொண்டிருந்தான் முதலில் வந்த இருவருள் ஒருவனான தலைமை சமையல்காரன். இரண்டு மூன்று தடவை கடை ஷட்டரை தட்டியும் பயனில்லை. "செல்வோ, பசங்களுக்கு போன் போடு. கட சாவி இருக்கான்னு கேளு" கைபேசியில் சில நொடிகள் பேசிவிட்டு "சாவி இல்லையாம்" என்றான் செல்வம். "முதலாளிக்கு போனப் போடு" செல்வம் முதலாளியைக் கைபேசியில் அழைத்தான்...
Comments
Post a Comment