பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்


பட்டிமன்ற தலைப்பு : மனிதனுக்கு அதிக சுகம் தருவது எது?
இரவில் தூங்குவதா? பகலில் தூங்குவதா?

நடுவர் கந்தகன்: வந்திருக்கும் அனைத்து மக்களுக்கும், ஊர் விழா கமிட்டி குழுவினருக்கும் எங்கள் பட்டிமன்றக் குழுவினரின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.  இரவின் குளிரையும் பொருட்படுத்தாமல் கம்பளியும்,  குல்லாவுமாய்க்  கண்ணப்படும் பாட்டி, தாத்தாக்களே, மாங்கல்ய வரி  கட்டி எமக்கு இம்மாதத்தை மங்கலமாக்கிய தாய், தந்தையரே, சும்மா பட்டிமன்றத்தை வேறு வழியில்லாமல் பார்க்க வந்திருக்கும்  இளசுகளே, இன்னும் சற்று நேரத்தில் தூக்கம் காணும் வண்டு, சிண்டுகளே உங்கள் அனைவர்க்கும் வணக்கம்.

வேலை, உணவு, உறக்கம் இப்படித்தான் நாம் ஆண்டாண்டுகாலம் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆதியில், வெறும் உணவும், உறக்கமும் தான் பின் நாகரிக மாற்றத்தால் வேலை வந்து ஒட்டிக்கொண்டது. நம்மால் தூங்காமல் இருக்கவே முடியாது. ஆமா வா? இல்லையா?...ஆனாதானே? இப்படியிருக்க, துக்கத்தைப்  பற்றி தான் நாம் இந்த பட்டிமன்றத்தில் பேசப்போகிறோம். தலைப்பு என்னவென்றால், "மனதனுக்கு அதிக சுகம் தருவது ஏது?  இரவில் தூங்குவதா? பகலில் தூங்குவதா?" அட தலைப்பைச் சொன்ன உடனே இந்த பக்க அணியினரான வீரவைகுண்டர் கொட்டாவி விடறாரே, நல்ல சகுனம், நல்ல சகுனம். ஆரம்பிப்போம்.

அதற்குமுன் அறிமுகம் அவசியம் அன்றோ? இரண்டு அணிகள், அணிக்கு இருவர். என் இடதுபக்கத்தில், இரவில் தூங்குவதே என்று பேச  பேரா. வீரவைகுண்டன் அவரை தொடர்ந்து பேரா. கல்வியரசி. பகலில் தூங்குவதே என்று வாதிட பேரா. மணிமுத்தம்மாள், பேச்சாளர் தேவதத்தன். முதலில் பேச வருவது பேரா. வீரவைகுண்டர் இரவில் தூங்குவதே சுகம் என்ற
அணியிலிருந்து. வாங்க.

வீரவைகுண்டன்: இந்த உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் தூக்கம் இன்றியமையாத ஒன்று. உலகம் என்ன உலகம், சூரியனே இரவில் மறைந்து காலையில் தான் வருகிறான். பார்த்தீர்களா நடுவர் அவர்களே, சூரியனே இரவில் தான் உறங்கச்செல்கிறான் பகலில் இல்லை. இரவில் தூங்குவது தான் இயற்கையோடு ஒன்றி வாழும் பெரும்பாலான உயிர்களின் சொல்லப்படாத விதி. மட்டுமல்லாமல் இரவில் தூங்குவது தான் உசிதம், ஊரே அடங்கிவிடும், பின்பு எனன? அமைதியான உறக்கம், நிம்மதியான தூக்கம்.

பிறப்புமுதல் இறப்புவரை இருளும் உறங்குமும்தான் ஜோடியாக கை கோர்த்துக்கொண்டு நம் வாழ்நாள் முழுவதும் சுத்தி வந்து கொண்டிருக்கிறது நடுவர் அவர்களே, இந்த நேரத்துல நீங்க எப்புடீன்னு கேட்கணும்.

நடுவர்: எப்படி?

வைகுண்டர்: அதாவது, கருவறை இருளில் தூங்குவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்க்கில்லை. அன்றிலிருந்தே மனிதனின் உடலில் உள்ள செல்கள் அல்லது உறுப்புகள் வளர்வதும் மற்றும் தன்னைத்தானே சரி செய்துகொள்வதும் நாம் இருளில் தூங்கும்போது தான் நிகழ்கிறது. நடுவர் அவர்களே, சூரிய ஒளியும், வெட்பமும் இல்லாதபோது நாம் எடுக்கும் ஓய்வில் அதாவது தூக்கத்தில்தான் நம் செல்கள் வளர்ந்து தன்னைத்தானே சரிசெய்து நமக்கு உதவி செய்கிறது. இதையெல்லாம் தெரியாம இதை எதிர்த்துப்பேச இரண்டு பேரு கிளம்பி வந்துட்டாங்க. நடுவர் அவர்களே, இதையெல்லாம் நீங்க கருத்தில் கொள்ளணும். இறுதியாக ஒன்றைமட்டும் சொல்லிக்கொண்டு நிறைவு செய்கிறேன். "இரவில்  தூங்கலீனா அதுபேரு பேய், பகலில் தூங்குனா அதுக்கு பெரு சோம்பேறி" யாரும் சோம்பேறிப்பேயாக இருக்க விரும்பமாட்டீர்கள் என்று நினைக்கிறன் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி ஊர் பொது மக்களுக்கும், கிராம நிர்வாக கமிட்டிக்கும்  எனது பொங்கல் வாழ்த்துகளை   தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

நடுவர்: வீரவைகுண்டர் வழக்கத்தைவிட்டு மாறாமல் வழக்கம்போல் விளக்கமாக விலாசினீர்கள். மனிதனிடம் இருந்து இருளையும் அதாவது இரவையும் தூக்கத்தையும் பிரிக்கமுடியாது என்று கூறியிருக்கிறீர்கள். யோசிக்க வைக்கிறது. அடுத்து வர்ர பேரா. மணிமுத்தம்மாள் என்ன பேசப்போகிறர்க்களென்று பார்ப்போம். வாங்கம்மா.

மணிமுத்தம்மாள்: உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள். நடுவர் அவர்களே, நான் பேசுவதற்கு முன் வீரவைகுண்டரை ஒன்னு கேட்கணும். ஐயா வைகுண்டரே, நீங்க பள்ளிக்கூடத்துல பூலோகம் படிச்சதே இல்லையா? அது எப்படி? சூரியன் இரவில் தூங்கப்போயிருமா? அப்போ, நிலா என்ன நைட் ஷிபிட் பார்க்குதா? உங்க அறியாமையை நினச்சா பரிதாபமா தான் இருக்கு. ஐயா தெரியலீன்னா இப்ப தெரிஞ்சுகோங்க, சூரியன் தூங்கவெல்லாம் போகல, அது அப்பிரிக்கா ஐரோப்பிய, அமெரிக்காவெல்லம் போயிட்டு நாளை காலை நம் ஊருக்கு வந்துடும். வைகுண்டரே, இனிமேல் பட்டிமன்ற அழைப்பிதழ் வந்தால் காலில் செருப்புகூட அணியாமல் ஓடி வந்து விடாதீர்கள், சற்று பட்டிமன்ற தலைப்பை நன்கு வசித்துப்  பாருங்கள். ஏனென்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு மனிதனுக்கு சுகம் தருவது எது என்பதுதானே  தவிர மனிதனுக்கு எது இன்றியமையாதது என்பது இல்லை.

நடுவர் அவர்களே, பகல் கனவுதான் பலிக்கும். பெரும்பாலும் இரவில் வரும் கனவு இரவின் இருளிலேயே மறைந்து விடுகிறது, நமக்கு நியாபகம் வருவதில்லை.என்ன தான் இரவுமுழுக்கத் தூங்கினாலும் மதிய உணவிற்கு பின் சித்த நேரம் நித்திரையினால் வைகுண்டத்தை காணாதோர் இந்த உலகத்தில் இருக்க வாய்ப்பில்லை. அதிலும் அதிகாலை நேரம் எழுந்து சிரமபரிகாரம் முடித்து, காலையுணவு உண்ட பின் உறங்கியிருக்கிறீர்களா? செய்துபாருங்கள் அடிக்ட் ஆகி விடுவீர்கள்.

நடுவர் அவர்களே, பகலில் தூங்குவதன் மூலம் சுகமே அதிகம் என்று நிரூபிக்க இன்னோரு பாயிண்ட் சொல்லவா? கொசுக்கடி. ஆம் நடுவர் அவர்களே, இரவில் தூங்கும்பொழுது கொசுக்கடி, கொசுவர்த்தி மற்றும் நவீன கொசுவிரட்டியின் வாசனைகள், கொசுவின் சிர்ர்  சிர்ர் சத்தம், எல்லாத்துக்கும் மேலாக குறட்டை சத்தம், அதுவும் பக்கத்து வீட்டில் இருந்து. ஆம் நடுவர் அவர்களே, நம் வீட்டில் குறட்டை சத்தம் வந்தால் ஏதாவது பண்ணலாம், பக்கத்துக்கு வீட்டில் இருந்து வந்தால் என்ன பரிகாரம் செய்வது? சொல்லுங்கள். இவ்வளவு சிக்கல் வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரவில் எப்படி சுகமா, நிம்மதியாக தூங்க முடியம்? 

நடுவர்: அப்போ குறட்டை விடரவர் சுகமாக தூங்குகிறாரா இருக்கும்.

மணிமுத்தம்மாள்: குறட்டை காரர்கள் ஒருவிதம் என்றால் துக்கத்தில் உளறுபவர்கள் ஒரு ரகம். இப்போ  சொல்லுங்க? பரந்தாமனை தியானிப்பதும் ஒண்ணுதான், பகலில் தூங்குவதும் ஒண்ணுதான். இத்துடன் நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்.

நடுவர்: மணி மணியாகவும், முத்து முத்தாகவும் பேசுனீர்கள். கொசுக்கடியை நினைத்தால் வந்த தூக்கம் கூட தூர ஓடிவிடுகிறது. கொசுக்கடியை ஒப்பிட்டால் நவீன கொசு விரட்டிகள் எந்தவகையிலும் சளைத்ததில்லை. ஆனால், எங்கள் வீட்டில் பகலிலும் கொசுக்கள் உக்கிரமாக இருப்பதை பார்க்க முடிகிறது. அடுத்து பேச தயாராயிட்டாங்க பேரா. கல்வியரசி. வாங்கம்மா வாங்க. கொசுக்கடிக்கு நீங்க எனன மருந்து வச்சுருக்கீங்கன்னு பாப்போம்.

கல்வியரசி: மேடைமுன் கூடியிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றிகள். அனைவர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எனது கருத்து என்னவென்றால், எதிர் அணியினர் கூறுவதுபோன்று பகல் தூக்கம் அதிக சுகம் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ஏன் நம்மால் பகலில் நீண்ட நேரம் அதாவது காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக தூங்க முடிவதில்லை? நான் என் வாழ்நாளில் இதுவரை அப்படி தூங்கியதில்லை. எதிரணியினரும் அப்படி தூங்கியிருக்க வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் பகல் தூக்கத்தை உருக்குலைக்கும்வன்னம் பல இடையூறுகள் இருக்கிறது. முதலில் வெளிச்சம், என்னதான் கதவு, சாளரம் இவற்றை மூடி திரைச்சீலை பயன்படுத்தி அறையை இருளில் ஆழ்த்தினாலும் பகலில், ஒரு அம்மா முன்று தெரு தள்ளி 'தப்' 'தப்' என்று துணி துவைக்கும் சத்தம் நம் அறையில் எதிரொலிக்கும் சத்தத்தை தடுக்க முடுயுமா?

 அது மட்டுமா, குழந்தை அழுகும் சத்தம், தகரத்தை தர தர வென்று  தரையில் இழுக்கும் சத்தம், வாகனங்களின் சத்தம், இன்னும் பலப்பல கேட்காத ஒலியெல்லாம் அப்போது தான் காதில் விழும். இவைகள் இருப்பினும் நாம் தூங்கலாம் ஆனால் ஒருபோதும் ஆழ்ந்து தூங்கமுடியாது. பகலை ஒப்பிட்டால் இரவில் இடையூறுகள் மிகமிக குறைவுதான்.  கொசுக்கடிக்கு இருக்கவே இருக்கு கொசுவலை. அத விட்டுட்டு உங்கள யாரு நவீன கொசுவிரட்டி வாங்க சொன்னது. கொசுவலைக்கும் தொலைக்காட்சில் விளம்பரம் போடணுமா?

நடுவர் அவர்களே, நான் மணிமுத்தம்மாளிடம் ஒன்னு சொல்லணும், மதிய தூக்கம் மாலைக்கு மேல் நீலுமேயானால் அது தூங்கும்போது வேண்டுமானால் சுகம் தரலாம், ஏழுந்த பின் டிப்ரெஸன்  தான் தருகிறது, இது என் சொந்த அனுபவம், நான் விசாரித்தவரையில் பலரும் அவ்வாறே மொழிந்தனர். வாய்ப்புக்கு நன்றிபாராட்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

நடுவர்: சொல்ல வந்ததை திறம்பட சொன்னீர்கள். அப்போ கொசுக்கடிக்கு சிறந்த மருந்து கொசுவலை தானா?  நல்லது. மாலையில் தூங்கினால் லட்சுமி வீட்டிற்கு வரமாட்டார்கள் என்பார்கள், ஆனால் லட்சுமி வருகிறாளோ என்னமோ டிப்ரெஸன் வரும் என்று அருமையாக பேசுனீர்கள். பகலில் தூங்குவதில் சிக்கலில் ஒன்றை நீங்கள் மறந்துவிட்டீர்கள். அது, என்றுமே இடையூறாக இருந்து வரும் பக்கத்து வீட்டு தொலைக்காட்சின் சத்தம், அதுமட்டுமல்லாமல் இலவச இணைப்பாக வரும் மிக்ஸி, குக்கர் விசில் சத்தங்கள். 

சரி, இறுதியாக நம்மிடம் பேச ஆயத்தமாக ஒருவர் இருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்று கேட்டுவிட்டு இதற்கு ஒரு பைசல் பண்ணுவோம். வாங்க தேவதத்தன் அவர்களே, வந்து உங்க வித்தையை காமிங்க.

தேவதத்தன்: ஐயா, எதிர் அணியில் இருப்பவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். தூக்கம் என்பது நேரம் பார்த்து தூங்கி அலாரம் வைத்து எழும் ஒரு செயல் கிடையாது. அடிப்படையில் நாம் தோழர் மார்க்ஸ் கூறியது போல் ஒரு சமூக விளங்குதான். நம் உடம்புக்கு எப்போது தூக்கம் தேவையோ அப்போது தன் தேவையை அடைந்துவிடும். இதில் நேரம் காலம் என்ற பேதமில்லை. தூக்கம் வந்தால் தூங்கு இல்லையேல் தூங்காதே. அவ்வளவுதான். 

என்னதான் இரவில் வீட்டில் கட்டில், பஞ்சு மேதை, ஏசி, கொசுவலை இவற்றின் உதவியோடு உல்லாசமாக தூங்கினாலும் பகலில் வேப்பமரத்தடியில் அல்லது அரச மரத்தடில் இவ்வளவு ஏன்? சீமைக்கருவேலமட்டத்தினடியில் படுத்தாலும் கூட வருமே ஒரு சுகம் அது எதில் வரும் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? அப்ரோம் என்ன சொன்னீங்க? பகலில் தூங்கினா சோம்பேறியா? எல்லாத்தியும் அப்படி சொல்ல முடியாது நடுவர் அவர்களே. இரவில் வேலை செய்யும் அனைத்து தொழிலார்களும் பகலில் தான் தூங்குகிறார்கள். அவர்கள் எப்படி சோம்பேறியாவார்கள்? எதையும் யோசிக்காம அப்படியே பேச வந்துருவாங்க. நடுவர் அவர்களே, உடல் உபாதைகளால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளால் இரவில் நிம்மதியாக தூங்க அவர்களால் முடிவதில்லை. பகலில் சற்று நேரமேனும்  அவர்கள்  நிம்மதியாக தூங்குவதைக் காணமுடிகிறது. இதை இல்லையென்று சொல்ல முடியுமா அவர்களால்?

நடுவர் அவர்களே, பேருந்தில் பயணம் செய்ததுண்டா? பகலில் பேருந்து பயணத்தின்போது பேருந்தின் ஜன்னல் கம்பிகள் மீதி சாய்ந்துகொண்டு தூங்கும்போது வருமே  சுகம், அட அட அட. அதை எப்படி வாயால் விவரிப்பேன்? அதில் அவ்வளவு சுகம். நடுவர் அவர்களே, இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள் பகலில் தூங்குவதின்  சுகங்களை. உங்கள் புரிதல் தீர்ப்பில் பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன். இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். அனைவர்க்கும் இன்பமளிக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

நடுவர்: இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம். இரண்டு பக்கம் உள்ள அணியினர் தத்தம் வாதங்களை மிக நன்றாகவும், நேர்த்தியாகவும் கூறிவிட்டார்கள். முதலில் சுகம் என்றால் என்ன என்று பார்த்து வருவோம்.  சுகம் என்பது அறியப்பட வேண்டியது அடையவேண்டியது இல்லை. அப்போ இதில் இருந்து என்ன தெரியுது? பகலில் தூங்குவதினால் தான் சுகத்தை அடைய முடியும், இரவில் தூங்குவதினால் தான் சுகத்தை அடைய முடியும் என்பது ஒரு தவறான புரிதல் ஆகும். 

இப்போ  நம் தலைப்புக்கு வருவோம், மனிதனுக்கு அதிக சுகம் தருவித்து எது? பகலில் தூங்குவதா? இரவில் தூங்குவதா? இவை இரண்டில எதில் சுகம் காண்கிறார்கள் என்பது தனிநபர் சார்ந்த விஷயமாக இருக்கிறது. ஆனால் ஆண்டாண்டுகாலம் நாம் பட்டிமன்றத்தில் கடைபிடிக்கும் விதியின்படி, பெரும்பாலோனரை கருத்தில் கொண்டு சிறுபான்மையினரை புறம் தள்ளுவோம். தூக்கம் என்றால் என்ன எதற்கு என்று கூறி எனது நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. அது உங்களுக்கே தெரியும்.

முதலில் இரவில் தூங்குவதை பார்ப்போம். இரவுத்தூக்கம் இயற்கையோடு ஒன்றிய செயல், இதை யாரும் மறுப்பதற்கில்லை. பகலில் உழைத்து வீடு திரும்பி, வீட்டு வேலையும் செய்து முடித்து இரவில் எல்லா கவலையும் பாரத்தையும் கழற்றி வைத்து இரவில் தூங்குபவர்கள் நிம்மதியும் சுகமும் என்னவென்று அறிகிறார்கள். மறுபுறம் பகலில் தூங்குபவர்கள், தூக்கத்தில் சுகத்தை தேடுபவர்கள் என்றுதான் நான் பார்க்கிறேன். நண்பர் கூறினார் பேருந்து தூக்கம் சுகம் என்று. பேருந்து தூங்கும்போது பெரும்பாலும் நம் மனம் சட்டை பை, அதில் உள்ள பணம், கைபேசி, இறங்கவிருக்கும் ஸ்டாப் இவற்றில் தான் அதிக அக்கறை செலுத்துகிறது, இப்படி இருக்க இது எப்படி ஆழ்ந்த சுகமான தூக்கமாக இருக்கும்? அரைகுறை தூக்கம் எப்படி சுகமளிக்கும்?

மேலும் இரவில் உழைப்பவர்கள் பகலில் தூங்குவதால்ஆரோகியத்தை இழக்கிறார்கள். இதை நான் கூறவில்லை அறிவியல் கூறுகிறது. நைட் ஷிப்ட்டில் வேலை செய்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் படும் சிரமம் தெரியும். பகலில் மரத்தடில் படுத்தால் சுகமாக தூங்கலாம் என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது.  அது ஒரு சுகமா ஓய்வு என்று தான் நான் பார்க்கிறேன், ஆங்கிலத்தில் nap  என்பார்கள், இதற்கும் தூக்கத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. பார்க்கப்போனால் இரவில் தூங்குவதிற்கும் சில சில இடையூறுகள் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் இதற்கும் பகலில் உள்ள இடையூருக்கும் வேறுபாடு இருக்கிறது. பகலில் உழைப்பவருக்கு இரவு தூக்கம் சுகமளிக்கிறது, சிலர் இரவில் கொசுக்கடி, குறட்டை சத்தம் இவற்றை பொருட்படுத்தாமல் கட்டை போன்று தூங்குவதை மறுக்கமுடியாது. ஆதலால் இதுவே எனது தீர்ப்பு.
மனிதனுக்கு அதிக சுகம் தருவது...
இரவில் தூங்குவதே!!  இரவில் தூங்குவதே!!  இரவில் தூங்குவதே!! 
நன்றி.  

சில வினாடி கரகோஷங்கள். கூட்டம் கலைந்தது.

Comments

  1. Aaama iravil thoonguvade.. aduvum ennai pol thoonguvade sugam... ��.. 13 : 2 solve this puzzle in this blog

    ReplyDelete
    Replies
    1. ஆம் சரியாகச் சொன்னாய் :)

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஈசல்

கிழம்